Wednesday 17 February 2016

சாளுக்கியர்களும் முருகப் பெருமானும்

முருகக்கடவுளின் வழிபாடு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வடநாட்டிலும் பெருமளவு பரவியிருந்தது என்பதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்து வந்தேயிருந்திருக்கின்றன. ஆனால், வட இந்திய அரசர்கள் பெரும்பாலும் சிவன், விஷ்ணு மற்றும் சக்தி வழிபாட்டையே பெருமளவு பின்பற்றியிருக்கிறார்கள். தங்களது கல்வெட்டுகளில் குறிப்பிட்டும் வந்திருக்கிறார்கள். இதற்கு ஒரு விதிவிலக்காக அண்மையில் நான் பார்த்த ஒரு கல்வெட்டுச் செய்தி இருக்கிறது. அதை  இங்கே வாசித்துவிடுங்கள்.

சாளுக்கிய அரசன் முதலாம் கீர்த்திவர்மன், பிரசித்தி பெற்ற இரண்டாம் புலிகேசியின் தந்தை. இவன் மறைந்தபோது, புலிகேசியும் அவன் சகோதரர்களும் சிறுவர்களாக இருந்ததால், கீர்த்திவர்மனின் சகோதரன் மங்களேசன் சாளுக்கிய நாட்டை ஆண்டுவந்தான். கீர்த்திவர்மனின் ஆட்சிக்காலத்தில், இளவரசனாக இருந்த மங்களேசன்  வெட்டுவித்த கல்வெட்டுத்தான் இது.   திருமாலின் கோவிலைக் கட்டுவதற்காகவும் கொடுக்கப்பட்ட நிவந்தங்களுக்காக எழுப்பபட்ட இந்தக் கல்வெட்டு முருகப்பெருமானின் பாதார விந்தங்களைத் தொழுதே ஆரம்பிக்கிறது. குறிப்பாக சாளுக்கியர்கள் முருகப்பெருமானின் திருவடிகளைத் தொழுபவர்கள் என்பதே இந்தக் கல்வெட்டு அளிக்கும் செய்தி. அதே சமயம் இந்தக் கல்வெட்டில் மங்களேசன் தன்னைத் திருமாலின் அடியவனாகக் கூறிக்கொள்கிறான். ஆக, சைவ, வைணவப் பிரிவுகள் அக்காலத்தில் பெரிதும் பேணப்படவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. 

இப்படி இந்து மதத்தைப் பின்பற்றிய சாளுக்கியர்களை, என்ன காரணத்தாலோ சமண மதத்தவர்களாக சிவகாமியின் சபதத்தில் கல்கி சித்தரித்திருந்தார். இதற்கான காரணமும் ஆராயப்படவேண்டிய ஒன்று. 

இந்தக் கல்வெட்டில் கிடைக்கும் இன்னொரு சுவையான விஷயம், மங்களேசன் தன் தமையனான கீர்த்திவர்மனின் மீது கொண்டுள்ள மரியாதை. இந்தக் கோவிலைக் கட்டிய புண்ணிய பலன் தனது தமையனுக்குச் சேரவேண்டும் என்று கோரும் அவன், தமையனுக்குப் பணிவிடை செய்த பலன் தனக்குச் சேரவேண்டும் என்றும் வேண்டுகிறான். தமையன் மீது இவ்வளவு பக்தி கொண்டிருந்தாலும் அவனது மறைவுக்குப் பிறகு, ஆட்சியை முறைப்படி புலிகேசிக்கு அளிக்காமல், தானே கைப்பற்றிக்கொண்டு, புலிகேசியையும் அவனது சகோதர்களையும் காட்டிற்கு விரட்டிவிட்டதாக வரலாறு சொல்கிறது. பிற்பாடு வயதுவந்தபின், புலிகேசி தனது சிற்றப்பனுடன் போர் புரிந்து ஆட்சியை மீட்டுக்கொண்டான். 

பதவி ஆசை  எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது ?

No comments:

Post a Comment