Thursday 28 January 2016

தமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் - 2

சூரியன் பூமியைச் சுற்றி நகரும் நீள்வட்டப் பாதையில் விண்மீன்கள் அமைந்திருப்பதாகப் பார்த்தோம் அல்லவா. சூரியன் பயணம் செய்யும் அந்தப் பாதையை ஒரு கோடாக உருவகித்தால் எல்லா விண்மீன்களும் அந்தப் கோட்டில் இருக்கவில்லை, மாறாக அதன் இருபுறத்திலும் அமைந்திருந்தன. அந்தப் பாதையிலேயே இருந்த சில விண்மீன்களில் முக்கியமானது அஸ்வினி என்ற பெயருடைய விண்மீன். சூரியன் பயணம் செய்கின்ற நீள்வட்டப்பாதையின் மத்தியில் அமைந்துள்ளது இது. இந்திய நாட்குறிப்புக் கணக்கீடும் முறை உருவான சமயத்தில் (கிட்டத்தட்ட பொ.வ. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில்) வேனில் சமநாள், அதாவது இரவும் பகலும் சமமாக இருக்கும் நாள் சூரியன் அஸ்வினி மீனில் இருந்த போது வந்தது. காலப்போக்கில் பூமியின் அச்சு நகர்ந்து வந்ததில் காரணமாக அது மேற்கு நோக்கி இடம் மாறி தற்காலத்தில் மார்ச் 22ம் தேதியாக கணிக்கப்படுகிறது. அந்த நாளில் இருந்து தான் வசந்த காலம் துவங்கியது. இந்தக் காரணங்களால் அந்த விண்மீன், நீள்வட்டப் பாதையின் ஆரம்பப் புள்ளியாகவும், அது இடம்பெற்றிருந்த ராசியான மேஷம் ராசிக்கட்டத்தின் முதல் ராசியாகவும் அமைக்கப்பட்டது. இங்கு மட்டுமல்ல, உலகின் மற்ற ராசி வரிசைகளிலும் மேஷத்திற்குத் தான் முதலிடம். ஆங்கில வரிசையும் லிருந்தான் துவங்குகிறது.

மேஷம் முதல் ராசியாதலால் அந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாள் ஆண்டின் முதல் நாளாகக் கணக்கிடப்பட்டது. எனவே சூரிய நாட்குறிப்பு முறையைப் பின்பற்றுவோர் அனைவருக்கும் சூரியன் மேஷத்தில் பிரவேசிக்கும் நாளே புத்தாண்டு. சரி, அப்படியானால் புத்தாண்டு துவங்கும் நேரம் அனைவருக்கும் சமமாக இருக்கிறதா என்றால், இல்லை. சூரிய நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து நான்கு வேறுபட்ட புத்தாண்டுத் துவக்கங்கள் உள்ளன.

ஒரியா முறை  - இந்திய முறையில் ஒரு நாள் என்பது அன்றைய சூரிய உதயத்திலிருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை உள்ள 24 மணி நேரம் ஆகும். இந்த ஒரு நாளில் சூரியன் எந்த நேரத்திலும் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு இடம் பெயர்ந்தால் அதுவே அந்த மாதத்தின்  துவக்கமாக (மேஷ ராசியாக அது இருந்தால் அது ஆண்டின் துவக்கமாக) கொள்ளப்படும்

தமிழர் முறை - சூரியன் அந்த நாளின் சூரிய அஸ்தமானதிற்குள் இடம் பெயர்ந்தால் அன்றே அந்த மாதம் பிறப்பதாகக் கொள்ளப்படுகிறது. இல்லையேல் அடுத்தநாள் தான் மாதத்தின் முதல் தேதி.

மலையாள முறை - சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமானதிற்குள் உண்டான நேரத்தில் ஐந்திலிருந்து மூன்று பங்கு நேரத்திற்குள் சூரியன் இடம் பெயருமானால், மாதத் துவக்கம் அந்த நாளில் வரும் இல்லையேல் அடுத்தநாள் தான்.

வங்காள முறை - சூரிய உதயத்திலிருந்து அன்று நள்ளிரவு வரை சூரியன் இடம் பெயருமானால், மாதத் துவக்கம் அந்த நாளில் வரும்.

இவ்வாறு சூரிய நாட்குறிப்பு முறைகளிலேயே நான்கு வேறுபட்ட மாத / ஆண்டுத் துவக்கங்களின் கணக்கிடு முறைகள் உள்ளன. குறிப்பாக இவை ஒரே மதத்தை / மொழியை  சார்ந்து இல்லாமல் அந்த அந்தப் பகுதிகளுக்கு உரித்தனவைகளாக உள்ளன என்பதைக் கவனிக்கவேண்டும்.

இப்போது ஆண்டுகளுக்கு வருவோம், தமிழர் நாட்குறிப்பு முறையில் 60 ஆண்டு சுழற்சி முறை பின்பற்றப் படுகிறது. இது என்ன காரணத்தால் ? வானில் தெரியும் கோள்களில் மெதுவாக நகரும் கோள்கள் இரண்டு. வியாழனும் சனியும் தான் அவை. வியாழன் சூரியனைச் சுற்றி வர சுமார் பன்னிரண்டு ஆண்டு காலம் ஆகிறது என்று கணித்தனர் அன்றைய வானவியலாளர். ஆனாலும் பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்தாலும் தான் ஆரம்பித்த இடத்திற்கு (ஆரம்பப் புள்ளிக்கு)  வியாழன் வருவதில்லை. அவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஆரம்பப் புள்ளிக்கு அது மீண்டும் வர 60 ஆண்டுகள் ஆகும் என்றும் கணித்தனர் (அதாவது 5 தடவை சூரியனைச் சுற்றிவந்தால் அது தன் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வருகிறது). இதை வைத்து 60 ஆண்டுச் சுழற்சியை ஏற்படுத்தினர். (துல்லியமாகச் சொல்லவேண்டுமானால் வியாழன் அதே இடத்திற்கு திரும்ப வரும் காலம் 83.02 ஆண்டுகள், தற்கால வானவியல் உப காரணங்களின் கணிப்புப்படி) அதே போல் சனி கிரகம் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. 60 ஆண்டுகளில் அது இருமுறை சூரியனைச் சுற்றி வந்துவிடும். இதனால் 60 ஆண்டு காலக்கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பொ. வ. ஆறாம் நூற்றாண்டிலிருந்து புழக்கத்தில் வந்தது. ஆனால் இந்தியாவில் எல்லா இடத்திலும் இந்த 60 ஆண்டுச் சுழற்சி முறை பின்பற்றப்படுவது இல்லை. தமிழகத்தைத் தவிர ஆந்திரா, கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் மட்டுமே இம்முறை பின்பற்றப்படுகிறது. சீனாவிலும் இது போன்ற 60 ஆண்டு சுழற்சி முறை பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

சரி, இந்த 60 ஆண்டு முறையை மட்டுமா தமிழர்கள் பின்பற்றுகின்றனர் என்றால் இல்லை. கலி வருடம் என்ற நீள் நாட்குறிப்பு முறையையும் பின்பற்றுவோர் உண்டு. இது கலியுகம் துவங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டது. கலியுகம் பொ.வ.மு 3102ம் ஆண்டு துவங்கியதாக நம்பப்படுகிறது. அதனடிப்படையில் இப்போது நடக்கும் கலி ஆண்டு 5117. தமிழர்களைத் தவிர கலி ஆண்டை இந்தியாவில் பின்பற்றுபவர்கள் அஸ்ஸாமியர்களும், வங்காளிகளும் மட்டுமே.

No comments:

Post a Comment