Skip to main content

தமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் - 1

புத்தாண்டு என்பது ஒரு  மகிழ்வுக்குரிய தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பழையவற்றை மறந்து ஒரு புதுத் துவக்கத்தை அந்த நாள் உண்டாக்கும் என்று நம்புவோர் உண்டு. ஆனால் உலகத்திலேயே புத்தாண்டு என்பதை கேள்விக்குரிய ஒன்றாக ஆகிய ஒரே சமுதாயம் நம்முடைய தமிழர்களாகவே இருக்கும் என்றெண்ணுகிறேன். ஒவ்வொரு சித்திரை மாதமும் தை மாதமும் எது புத்தாண்டு என்பதில் ஏகப்பட்ட சர்ச்சைகள். அதற்கு மத, ஆன்மிக, கலாச்சார, மொழி சாயம் பூசுவோர் இருதரப்பிலும். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாட்குறிப்பு என்பது இது எதிலும் சம்பந்தப்பட்டதல்ல. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் நாட்காட்டிகள் ஏதாவது ஒரு அறிவியல் முறையின் அடிப்படையாகவே அமைந்தது. இந்திய நாட்குறிப்பு முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. அது ஒரு சமயம் சார்ந்தோ அல்லது ஒரு மொழி சார்ந்தோ அமைக்கப்பட்டதல்ல. அதன் பின்னால் இருக்கும் கணக்கீடுகளும் குறிப்புகளும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தவை.

மிகப் பழமையான இந்திய நாட்குறிப்பு முறையை அது பயன்படுத்தும் பெயர்சொற்களை வைத்து மதிப்பிடுவது சரியான செயல் அல்ல. அக்காலத்தில் பயன்படுத்தப்பட பல சொற்கள் மதத் தொடர்பானவைகளாக இருக்கலாம். அதனால் மட்டுமே அது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உரியது என்று ஒதுக்குவது முறையாகாது. தவிர இந்து மதத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட  நாட்குறிப்பு முறை இல்லை. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த மக்கள் தனித்தனி நாட்குறிப்பு முறைகளையே பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக தமிழர்கள் பயன்படுத்தும் நாட்காட்டி முறையின் மாதத் துவக்கமாக கணக்கிடப்படும் முறை இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயன்படுத்துவதில்லை.

இந்தப் பின்புலத்தில் இந்தியாவில் பயன்படுத்தும் நாட்காட்டி முறைகளைப் பற்றி சிறிது ஆராயலாம்.

இந்திய நாட்குறிப்பு முறை

இந்தியாவில் நாட்குறிப்பு முறை 'சூர்ய சித்தாந்தம்' என்ற வானவியல் நூலின் அடிப்படையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கிறது  என்ற போதிலும், மற்ற சில நூல்களையும் பின்பற்றுவோர் உண்டு. அடிப்படையில் இந்திய நாட்குறிப்பு முறைகளை இரண்டு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். சூரியனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சூரிய நாட்குறிப்பு முறை (ஸுர்யமானம்), சந்திரனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சந்திர நாட்குறிப்பு முறை (சந்திரமானம் )

இப்போது நாட்குறிப்பு முறையின் சில அடிப்படை வானியல் குறிப்புகள். (இங்கே எங்களுக்கு வானியல் முறைகளும் நட்சத்திரங்கள், ராசிகள், அவைகளைப் பின்புலமாகக் கொண்டு கோள்களின் நகர்வைக் கணிக்கும் முறையைப் பற்றியும் எங்களுக்குத் தெரியும் என்போர் இரண்டு பத்திகள் தாவி விடவும்.) ஏன் இவ்வாறு சூரிய, சந்திர நகர்வைப் பின்பற்றி நாட்குறிப்பு முறை ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். எந்த வித வசதிகளும் இல்லாமல் நம் முன்னோர்களுக்கு நாட்களை / ஆண்டுகளை கணிக்க தெரிந்த ஒரே வழி வானில் தெரியும் இரு பெரும் கோள்களான சந்திரனையும் சூரியனையும் பார்த்துக் கணிப்பதுதான். . ஆனால் தினமும் நகர்ந்து கொண்டிருக்கும் இவை இரண்டையும் வைத்து எப்படி நாட்களைக் கணிப்பது ?

அதற்கு வானில், பின்புலத்தில் ஓரளவு அசையாமல் கிட்டத்தட்ட இருந்த இடத்திலேயே (கண்பார்வைக்கு) நிலைத்திருந்த விண்மீன்கள் கை கொடுத்தன. சூர்ய, சந்திரர்களின் சுற்றுப்பாதையில் இருந்த 27 விண்மீன் கூட்டங்களை வகைப்படுத்தி 12 ராசிகளை உருவாகினர் அக்கால வானவியலாளர்கள் (இவற்றின் பெயர்களை ஜோதிடமும் உபயோகப்படுத்துவதால் இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம், இங்கு நாம் பார்ப்பது வானியல் மட்டுமே).  சூரியனும் சந்திரனும் பூமியிலிருந்து பார்க்கும்போது நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருவது போல் தெரியும். அந்தப் பாதியில் தான் மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளை அமைத்தனர். கிட்டத்தட்ட உலகின் எல்லாப் பகுதியிலும் ராசிகள் அதே மிருக வடிவில் வகைப் படுத்தப்பட்டு அவற்றிற்குரிய பெயர்களால் அழைக்கப்பட்டன. மேஷம்  .. என்ற பெயரில், சிம்மம் என்ற பெயரில். அந்த நீள்வட்டப் பாதையைக் கடக்க சூரியன் எடுத்துக்கொள்ளும் நாட்கள், பூமி சூரியனைச் சுற்றிவருகின்ற 365 நாட்கள். ஆக, ஒவ்வொரு ராசியையும் கடக்க 30 -31 நாட்களை சூரியன் எடுத்துக்கொள்ளும்

இப்போது மீண்டும் நாட்குறிப்பு முறைகளுக்கு வருவோம். சூரிய நாட்குறிப்பு முறையை இந்தியாவில் பின்பற்றுபவர்கள் அஸ்ஸாமியர்கள், தமிழர்கள், மலையாளிகள், ஒரிசா மாநிலத்தவர்கள், வங்காளிகள். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவேசிக்கும் நாளை மாதத்தின் முதல் நாளாகக் கணக்கிட்டனர். பன்னிரண்டு ராசிகளுக்கும் முதலாவதாக மேஷ ராசியை அமைத்தனர். ஏன் மேஷ ராசி முதலாவதாக ஆனது. பாதை நீள்வட்டமாகத்தானே இருக்கிறது? இதில் முதலாவது எது முடிவானது எது?
பார்ப்போம்

Comments

Popular posts from this blog

சமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன

தமிழக சமய வரலாற்றில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று மதுரையில் சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம்தான். எண்ணாயிரம் சமணர்களை பாண்டியன் நெடுமாறன் கழுவேற்றிவிட்டான் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா. இதன் பின்னணி என்ன என்று ஆராய்வோம்.

முதலில், இந்த நிகழ்வுக்கான எந்த ஒரு உறுதியான வரலாற்றுச் சான்றும் இல்லை என்பதை நினைவுறுத்திக்கொள்ளவேண்டும். இங்கே உறுதியான சான்று என்று நான் குறிப்பிடுவது கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகள் போன்ற சான்றுகள்.  நெடுமாற பாண்டியனின் காலத்திற்குப் பின்னால் கிடைத்த பாண்டியர்கள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நிகழ்ச்சி நடந்ததற்கான சான்று எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இந்த நிகழ்வை நாம் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.

இந்த இலக்கியச் சான்றுகளைப் பொருத்தவரை, அகச்சான்று என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது, ஒரு சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் அதைப் பற்றிப் பதிவுசெய்வது அகச்சான்றாகும். இந்த நிகழ்வு தொடர்பாக நமக்குக் கிடைத்த அகச்சான்றுகள் என்னென்ன?

இதைப் பார்ப்பதற்கு முன்னால், அந்தக் காலகட்ட…

களப்பிரர் யார் - 1

'ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற பிரபலமான தமிழ்திரைப்படக் காமெடி வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வரலாறு என்ற பெயரில் இப்போதெல்லாம் இணையத்தில் எழுதிக்குவிப்போருக்குப் பொருந்தும். அதமபட்சம் சாண்டில்யன் நாவல்களில் வரும் அளவு கூட வரலாற்றுக் குறிப்புகள் இல்லாமல் எழுதப்பட்ட பல கட்டுரைகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அஜெண்டா வைத்துக்கொண்டு எழுதும்போது ஆய்வுகள் எதற்கு என்ற நோக்கில் எழுதப்படும் இவ்வகைக் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுத வேண்டுமா என்று யோசித்தாலும், இதுவே வரலாறு என்று நிலைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதால், அப்படி எழுதப்பட்ட களப்பிரரைப் பற்றிய கட்டுரைக்கு ஒரு பதில்.களப்பிரர் காலத்தைப் பற்றிய சரியான தகவலோடு தொடங்கும் (பொயு 2 - 5ம் நூற்றாண்டு) இக்கட்டுரை இரண்டாவது பத்தியில் சறுக்கிவிடுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் பொயு 1ம் நூற்றாண்டிலிருந்து படைக்கப்பட்டதாகச் சொல்கிறது.  பொயுமு 10ம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டதாக சிலரால் குறிப்பிடப்படும் தொல்காப்பியத்தின் காலத்தை, பொயுமு 1ம் நூற்றாண்டிற்குப் பின்னால் கொண்டு செல்லமுடியாது என்பதே மாம…

க்ஷத்திரியப் பிராம்மணர்கள்

நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த கட்டுரை. நண்பர் @oorkkaaran  அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் தாமதத்திற்கு மன்னிப்பும் எழுதத்தூண்டியதற்கு நன்றியும்


பண்டைய பாரதத்தின் சமூகம் தொழில் அடிப்படையில் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பிரிவுகள் அவ்வளவு கறாராக ஆரம்பத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைக் காண்கிறோம். புராண இதிகாச காலங்களை எடுத்துக்கொண்டால் போர்த்தொழில் புரியும் க்ஷத்திரியரான கௌசிகர் வேதங்களைப் படித்து இராஜரிஷியாகவும் பின்னர் பிரம்மரிஷி விஸ்வாமித்திரராகவும் ஆகிவிட்டார். வேடனான வால்மீகி ரிஷியாகப் போற்றப்படுகிறார். அதேபோல் பிராமணரான பரசுராமர், போர்வேடம் பூண்டு க்ஷத்திரியர்களுடன் போர் புரிந்ததைப் பார்க்கிறோம். இப்படிப் பல உதாரணங்கள். இந்த வகையில் பிராமணராகப் பிறந்தாலும் போர்த்தொழில் புரிந்தவர்களை க்ஷத்திரியப் பிராமணர்கள் என்று குறிக்கும் வழக்கம் வந்தது. 
மகாபாரதத்தில் வரும் துரோணரும், கிருபரும், துரோணரின் மகனான அஸ்வத்தாமனும் குருக்ஷேத்திரப் போரில் பெரும் பங்கு வகித்தார்கள். பரசுராமர் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் போர்க்கலையைக் கற்றுத்…