Skip to main content

சித்திரைத் திருவிழா - 10

மாசித் தேரோட்டத்தை அழகர் ஆற்றில் இறங்கும் சித்ரா பௌர்ணமி விழாவோடு சேர்க்கத் திட்டமிட்டார் திருமலை நாயக்கர்., தேரோட்டத்தோடு பங்குனி மாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த திருக்கல்யாண வைபவத்தையும், அதோடு பட்டாபிஷேகம், திக்விஜயம் ஆகிய நிகழ்ச்சிகளையும் சேர்த்துவிட்டார். அதன்படி, பங்குனி உத்திரத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த திருக்கல்யாணம் சித்திரை மாதம் உத்திரத்திலும் அதற்கு அடுத்த நாள் தேரோட்டமும் அதற்கு அடுத்து சித்திரை பௌர்ணமியன்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடந்தது. பட்டாபிஷேகமும் திக்விஜயமும் திருக்கல்யாண வைபவத்திற்கு முந்தைய நாட்கள் நடந்தன. இப்படி மூன்று விழாக்களை ஒருங்கிணைத்து பெருந்திருவிழாவாக மாற்றிய நாயக்கர், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை தொலைவிலுள்ள தேனூரிலிருந்து மதுரை நகரில், வைகைக்கு அக்கரையில் உள்ள வண்டியூருக்கு மாற்றி அங்கே தேனூர் மண்டபம் என்ற மண்டபத்தையும் அந்த விழா நடப்பதற்காகக் கட்டிக்கொடுத்தார்.

இதனால் சித்திரைத் திருவிழாவிற்கு பெருந்திரளான மக்கள் கூடினார்கள். தேரோட்டமும் சிறப்பாக நடந்து முடிந்தது.  சுவாமி அம்மன் வீதியுலா மாசி வீதிகளில் நடைபெற்றது. 'அதெல்லாஞ்சரி, ஏற்கனவே சித்திரை மாதம் வஸந்த உற்சவம் நடந்திட்டு இருக்கே  அத என்ன பண்ணப் போறீஹ' என்று வடிவேலு போல் யாரோ அவரிடம் கேட்டிருக்கக்கூடும். வஸந்த உற்சவத்திற்காக அம்மன் சன்னதிக்கு எதிரில் புது மண்டபம் என்ற சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபம் ஒன்றைக் கட்டி, அதைச்சுற்றி அகழி போல் நீரை விடச் செய்து, உற்சவத்தையும் வைகாசி மாதத்திற்கு மாற்றிவிட்டார். சித்திரைத் திருவிழாவும் பதினான்கு  நாட்கள் ஜாம் ஜாம் என்று நடைபெற ஆரம்பித்தது. இந்தத் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும் வண்ணம் இருபது ஊர்களையும் கோவிலுக்கு நிவந்தமாக அளித்தார்.


மீனாக்ஷி திருக்கல்யாணம் 

இதை ஒட்டி ஒரு புதுக்கதையும் உருவானது. தங்கை மீனாட்சி திருமணத்திற்கு அண்ணனான கள்ளழகர் வருவதாகவும், வரும் வழியில் வைகையில் வெள்ளம் வந்ததால் அவரால் ஆற்றைக்கடந்து குறித்த நேரத்தில் வர முடியாமல் போனதாகவும், அதற்குள் திருமணம் நடந்துமுடிந்துவிடவே, கோபம் கொண்டு திரும்பிப் போனதாகவும் மக்கள் இடையே கதை ஒன்று உலவ ஆரம்பித்தது. அதனால் தான் வைகையாற்றின் கரைக்கு வந்து ஊருக்குள் வராமல் அழகர் திரும்பிப் போகிறார் என்றும் கூறப்பட்டது.




வெள்ளி யானை வாகனத்தில் சொக்கநாதரும் ஆனந்தராயர் தந்தப் பல்லக்கில் அம்மனும் 

அன்னை மீனாட்சியின் பிரதிநிதியாக தாம் ஆட்சி செய்கிறோம் என்பதைக் குறிக்கும் (பட்டாபிஷேக தினத்தன்று) செங்கோல் வாங்கும் நிகழ்ச்சியையும் ஏக தடபுடலுடன் நடத்தினார் திருமலை நாயக்கர். மதுரையில் தான் தங்குவதற்காகக் கட்டிக்கொண்ட திருமலை நாயக்கர் மஹாலில் இருந்து பாளையக்காரர்கள் புடைசூழ யானைமேல் அமர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க புறப்படுவார் திருமலை மன்னர். கோவில் ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மை பட்டாபிஷேகம் நடைபெறும். பட்டாபிஷேகம் நிறைவடைந்த பின்னர், மாலை மரியாதைகள்  பரிவட்டங்கள் மன்னருக்கு அளிக்கப்படும். அதன் பின் அம்மனின் கையிலிருந்த செங்கோலைப் பெற்றுக்கொண்டு மதுரை நகர் வீதிகளில் ஊர்வலமாகச் சென்று அரண்மனையை அடைவார் திருமலை நாயக்கர் என்று ஶ்ரீதளம் குறிப்பிடுகிறது.

மீனாட்சி கோவில், அழகர் கோவில் மட்டுமல்லாது மதுரை நகரைச் சுற்றியுள்ள பல கோவில்களையும் இந்தத் திருவிழாவில் பங்கு பெறச்செய்தார் திருமலை மன்னர். தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோவில், கருப்பண்ண சாமி கோவில், வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில் என்று எல்லாக் கோவில்களின் மூர்த்திகளும் ஏதோ ஒரு வகையில் இந்தத் திருவிழாவில் பங்கேற்றன. அதனால் அந்தந்தக் கோவிலுக்குரிய மக்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

அடுத்ததாக நாயக்கரின் கவனம் சென்றது மதுரையின் தெற்கில் இருந்த திருப்பரங்குன்றத்திற்கு.



படங்கள் நன்றி - ஸ்டாலின் ஃபோட்டோகிராஃபி





Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ