Tuesday 12 April 2016

சித்திரைத் திருவிழா - 2

மதுரை மீனாட்சியம்மையின் கோவில்  நம் நாட்டிலுள்ள புராதனமான கோவில்களில் ஒன்று. சைவர்களின் தலையாய கோவில்களில் ஒன்றாகவும் சாக்தர்களின் சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுவது இந்தத் தலம். லலிதா திரிபுரசுந்தரியின் மந்திரியான ராஜமாதங்கியின் அம்சமாக மீனாட்சியம்மை போற்றப்படுகிறாள்.   இப்படிப் பல பெருமைகள் வாய்ந்த, கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான இந்தக் கோவில் ஆதியில் பாண்டியர்களால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

தொடர்ந்த கடற்கோள்களால் தங்கள் தலைநகரங்களை மாற்றிக்கொண்டு வந்த பாண்டியர்கள், ஒருவழியாக மதுரையில் தங்கள் தலைநகரை அமைத்துக்கொண்டு, வைகையின் தென்கரையில் இந்தக் கோவிலைக் கட்டினார். முதலில் சிறியதொரு கோவிலாகத்தான் இது அமைக்கப்பட்டது. சுந்தரேஸ்வரர் சன்னதி, மீனாட்சி சன்னதி, மற்றும் ஒரு சுற்றுப் பிரகாரத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது இந்தக் கோவில். கோவிலைச் சுற்றி தாமரை வடிவில் மதுரை நகர் அமைக்கப்பட்டதாகக் குறிப்புகள் உண்டு.

சங்க காலப் பாண்டியர் காலத்திற்குப் பிறகு மதுரை நகர் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பாண்டியன் கடுங்கோன் களப்பிரர்களிடமிருந்து பாண்டிய நாட்டை மீட்டு இடைக்காலப் பாண்டிய அரசை அமைத்தார். அதன் பின் இந்தக் கோவிலை சீர் படுத்தி கோவில் நிர்வாகத்தை 'முப்போதும் திருமேனி தீண்டுவார்' என்ற ஆதி சைவர்களிடம் ஒப்படைத்தனர் பாண்டியர்கள். ஆகம விதிகளின் படி நித்தியக் கால பூஜைகளும்,   திருவிழாக்களும்  முறைப்படி நடைபெற ஆரம்பித்தன. ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடந்தாலும், குறிப்பிட்ட சில திருவிழாக்கள் புகழ் பெற்றவை. அந்தத் திருவிழா வைபவங்கள் நடை பெரும் இடங்களாக, விழாவின் போது சுவாமி, அம்மன் உலா வரும் இடங்களாக,  கோவிலைச் சுற்றியிருந்த ஒவ்வொரு தெருக்களும் இடம் பெற்று அந்தத் திருவிழா நடைபெறும் மாதங்களின் பெயர்கள் அந்தத் தெருக்களுக்கு வைக்கப்பட்டன.




(படம் : இரண்டாம் நாள் திருநாளில் பூத வாகனத்தில் சுவாமியும் அன்ன வாகனத்தில் அம்மனும் )


ஆடி மாதம் எண்ணெய்க்காப்பு உற்சவம், கோவிலை சுற்றி முதலில் அமைந்துள்ள ஆடிவீதியில் நடைபெற்றது, அதற்கு அடுத்த சித்திரை வீதியில் சித்திரம் மாதம் வஸந்த உற்சவம் நடைபெற்றது. சிவபெருமானின் 64 திருவிளையாடல்களைக்  குறிக்க நடைபெறும் ஆவணித்திருவிழா, மூன்றாம் நிலையிலுள்ள ஆவணி மூல வீதியில் நடந்தது. ஆவணி மூலத்திருநாளில்தான் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட விளையாடலைக் காட்டி அருளினான். மாசி மாதம் தேர்த்திருவிழா, மாசி வீதிகளில் நடைபெற்றது. இது தவிர, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களிலும் நடப்பது போல் பங்குனி உத்திர நாளில் இறைவன்- இறைவி திருமண நிகழ்ச்சி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இப்படி ஆலய வழிபாடுகள் வழக்கம்போல் நடந்துகொண்டு இருக்கும்போது நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. பல்லவர்களுடனான ஓயாத போர்களால், வலுவிழந்த பாண்டியர்கள், தங்கள் நாட்டை சோழர்களிடம் இழந்தனர். ராஜேந்திர சோழர் மதுரையைக் காப்பாற்றி தன்னுடைய நாட்டுடன் சேர்த்துக்கொண்டார். அதன் பின் குலோத்துங்க சோழர் ஆட்சியில் பாண்டியர்கள் தங்கள் நாட்டை மீட்டுக்கொண்டாலும் சோழர்களில் சிற்றரசர்களாகவே காலங்கழிக்கவேண்டியிருந்தது
               
                                                                                                                                 அடுத்து



2 comments:

  1. தெரியாத விஷயங்களை எழுதத் தொடங்குகிறீர்கள். இன்னும் இரண்டு கருத்துகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால் இதை முழுமையாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

    1. காலக்கணக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. எந்த நூற்றாண்டில் எது நடந்தது என்று தெளிவாகக் குறிப்பிட்டால் பரிணாமத்தின் புரிதல் இன்னும் எளிமையாகும்.

    2. சில தகவல்களுக்கு ஏதேனும் உசாத்துணை கொடுக்க முடிந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த இரண்டு கோரிக்கைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். :)

    இப்போது என்னுடைய ஐயப்பாடுகள்.

    1. சிலப்பதிகாரத்தில் மதுரையில் இருக்கும் கோட்டங்களைக் குறிப்பிடும் போது மீனாட்சியின் கோட்டத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை இளங்கோவடிகள். மறதியால் இளங்கோவடிகள் விட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஒருவேளை மீனாட்சியம்மை வேறு பெயரிலோ வேறு மெய்யியல் கருத்துகளோடு குறிப்பிடப்பட்டிருக்கின்றாரா?

    2. பிட்டுக்கு மண் சுமந்தது மாணிக்கவாசகரோடு தொடர்புடைய கதைதானே? மூவருக்கும் பின் வந்தவர் மாணிக்கவாசகர். கிட்டத்தட்ட ஒன்பதாம் நூற்றாண்டு என்பது என் தெளிவு. இடைக்காலப் பாண்டியர்கள் ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்க எந்த நூற்றாண்டில் முப்போதும் திருமேனி தீண்டுவார்களிடம் கோயில் ஒழுக்கு எந்த மன்னனால் ஒப்படைக்கப்பட்டது? அதற்கு முன்பு யாருடைய ஒழுக்கில் கோயில் இருந்தது? இந்தத் திருவிளையாடல் கொண்டாட்டங்கள் தொடங்கியது எந்த நூற்றாண்டில்?

    3. முப்போதும் திருமேனி தீண்டுவார்கள் என்று குறிப்பிடப்படும் ஆதிசைவர்கள் யார்? இவர்கள் இப்போது இருக்கிறார்களா? இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஏதேனும் புத்தகங்கள் சுட்டிகள் உள்ளனவா?

    நிறைய கேள்விகளைக் கேட்டுவிட்டேன். விவரங்களை அறியத்தாருங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. ஜிரா, கேள்விகளுக்கு நன்றி. வரும் பதிவுகளில் காலத்தையும் உசாத்துணைகளையும் அவசியம் தருகிறேன்.

      இப்போது கேள்விகளுக்கு வருவோம்

      1. சிலப்பதிகாரத்தில் மீனாட்சி அம்மனின் கோவில் பற்றிய குறிப்புகள் இல்லை என்பது உண்மை. சிலப்பதிகாரம் 'நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்' என்று சிவன் கோவில் ஒன்றைக் குறிப்பிடுகிறது. இது சொக்கநாதர் கோவிலாக இருக்க வாய்ப்பு அதிகம். மதுரையின் சிறப்பைப் பாடும் சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சியும் சிவன் கோவிலையே குறிப்பிடுகிறது என்பதையும் இங்கு கவனிக்கவேண்டும். இறைவனின் பெயரால் கோவில்கள் குறிப்பிடப்படுவது அப்போதைய வழக்கமாக இருக்கலாம். இவையெல்லாம் ஊகம்தான். சரித்திர பூர்வமான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

      2. மாணிக்கவாசகருடைய காலத்தைப் பற்றி பல சர்ச்சைகள் இருக்கின்றன. அவர் இடைக்காலப் பாண்டியர்களின் காலத்திற்கு முற்பட்டவர் என்று சொல்பவர்கள் உண்டு. மறைமலை அடிகள் இதைப் பற்றி ஒரு நூலே எழுதியிருக்கிறார். திருவிளையாடல்களை பொறுத்தவரை நரிகளைப் பரியாக்கிய லீலையைப் பற்றி அப்பர் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே இவையெல்லாம் பழங்காலந்தொட்டு வழங்கி வந்தவையாக இருக்கக்கூடும். மெல்ல மெல்ல திருவிழாக்களுக்குள் இவை புகுத்தப்பட்டிருக்கக் கூடும். இடைக்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் திருவிழாக்கள் இப்படி முறைப்படுத்தப்பட்டன என்று கோவில் திருப்பணி நூல் குறிப்பிடுகிறதே தவிர குறிப்பாக இந்த ஆண்டு என்று குறிக்கவில்லை. இந்தப் பகுதியில் ஆண்டுகளைக் குறிப்பிடாததற்கு இதுவும் ஒரு காரணம். சோழர்களில் காலத்தை அடுத்துதான் ஆண்டுகளின் கணக்கு தெளிவாக இருக்கின்றது. (ஒட்டுமொத்தத் தமிழக வரலாற்றிலும் இதே கதைதான்)

      3. இப்போதும் தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் பூஜை செய்பவர்கள் ஆதி சைவ சிவாச்சாரியார்கள்தான். ஐந்து - ஆறாம் நூற்றாண்டு வாக்கில் கோவில் நிர்வாகங்கள் இவர்கள் கையில் வந்தன. ஸ்தானீக பட்டார்கள் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களைப் பற்றி நான் எழுதிய இன்னொரு கட்டுரையில் http://bit.ly/1MrfXe9
      மேலும் சில விவரங்களைக் காணலாம்

      Delete