Wednesday 13 April 2016

சித்திரைத் திருவிழா - 4

ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்திலும் அதற்குப் பின் வந்த மாறவர்மன் குலசேகரன் காலத்திலும் பாண்டிய நாடு பெரும் செல்வத்தை ஈட்டியது என்று பார்த்தோம். இந்த செல்வ வளத்தைப் பற்றி குலசேகரன் காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வந்த மார்க்கோ போலோ தன்னுடைய பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார். பொன்னும் மணியும் முத்தும் குவியல் குவியலாக அரண்மனையில் கொட்டிக்கிடந்தன என்று எழுதியிருக்கும் அவர், புதிய அரசர் பட்டமேற்றவுடன், முந்தைய அரசர் ஈட்டிய செல்வத்தை பயன்படுத்தாமல், வர்த்தகத்தின் மூலமும் போர்களின் மூலமும் புதிதாக செல்வத்தை ஈட்டி கஜானாவில் சேர்த்தனர் என்று குறித்திருக்கிறார்.





சித்திரைத் திருநாள் நான்காம் நாள் - தங்கப்பல்லக்கில் சுவாமியும் அம்மனும்

இப்போது வரலாற்றைத் தொடர்வோம். குலசேகர பாண்டியர் தமது அடுத்த வாரிசாக ஒருவரை நியமிக்கும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார். அவருக்கு பட்டமகிஷியின் மூலம் பிறந்த சுந்தர பாண்டியர் மதுரையிலும் ஆசைநாயகியின் மூலம் பிறந்த வீரபாண்டியர் கொற்கையிலும் பாண்டிய குல வழக்கப்படி நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டிருந்தனர். முறைப்படி பட்டத்திற்கு வரவேண்டிய சுந்தர பாண்டியரைக் காட்டிலும், அறிவிலும் வீரத்திலும் சிறந்து விளங்கியதால் இளையவரான வீரபாண்டியரே அரசாளத் தகுந்தவர் என்று குலசேகர பாண்டியர் கருதி, அவருக்கே அரசு என்று அறிவித்தும் விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர பாண்டியர் தந்தையைக் கொன்று மதுரை அரசைக் கைப்பற்றிக்கொண்டார். வீரபாண்டியர் சும்மா இருப்பாரா, தனக்கு வேண்டியவர்களுடன் படை திரட்டி மதுரையை வென்று, ஆட்சிபீடத்தைத் தனதாக்கிக்கொண்டார். சுந்தர பாண்டியரையும் நாட்டை விட்டு விரட்டி விட்டார். இதனால் பெரும் கோபமடைந்த சுந்தரபாண்டியர் வீரபாண்டியரை விரட்ட தகுந்த சமயம் பார்த்துக் காத்திருந்தார்.

இந்தக் காலகட்டத்தில் டெல்லியில் அலாவுதீன் கில்ஜி ஆட்சிக்கு வந்திருந்தார். அவருக்கு யாரோ தென்னாட்டில் அதிக அளவு செல்வம் குவிந்து கிடக்கிறது என்று ஆசையைக் கிளப்பி விடவே, அந்தச் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுவர மாலிக்கபூர் என்ற தன் தளபதியை சுமார் ஒரு லட்சம் குதிரை வீரர்கள், ஆப்கானிய வில்லாளிகள், செங்கிஸ்கானின் பீரங்கிகளுடன் தென்னிந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். முதலில் வாரங்கலையும் அடுத்து ஹொய்சாளர்களின் தலைநகரான துவாரசமுத்திரத்தையும் (இன்றைய ஹளபீடு) தாக்கி வென்று, அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பெரும்செல்வத்துடன் கோலாரில் முகாமிட்டிருந்தார் மாலிக்கபூர். அவரிடன் தோற்றோடிய ஹொய்சாள அரசர் வீர வல்லாளர் அவரிடம் சமாதானம் பேசவேண்டிய நிலையில் இருந்தார். இவரிடம் நமது சுந்தர பாண்டியர் போய்ச் சேர்ந்தார். இருவரும் மாலிக்கபூரைச் சந்தித்தனர். பாண்டிய நாட்டில் பெரும் செல்வம் குவிந்து கிடப்பதாக ஆசை காட்டிய சுந்தர பாண்டியர் தனது தம்பியை வென்று நாட்டைத் தனக்கு அளித்தால், அந்த செல்வத்தின் பெரும் பகுதியை மாலிக்கபூருக்குத் தருவதாக ஆசை காட்டினார். நெடுந்தூரம் படை நடத்திக் களைத்திருந்தாலும், பண ஆசையால் பாண்டிய நாட்டின் மேல் படையெடுக்க மாலிக்கபூரும் ஒப்புக்கொண்டு, வீர வல்லாளரின் படை வழிகாட்ட, கில்ஜியின் படை மதுரை நோக்கி வந்தது. (மார்ச் 1311ம் ஆண்டு)

மாலிக்கபூரின் படைபலத்தை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த வீரபாண்டியர், மதுரையை விட்டு ஓடிவிட்டார். மாலிக்கபூர் ஏப்ரல் 10, 1311ல் மதுரை நகரை வந்தடைந்தார்.  கில்ஜியின் படைகள் மதுரை நகரில் பெரும் சேதத்தை விளைவித்தன. மீனாட்சியம்மன் கோவிலையும் அவர்கள் சூறையாடினர். முடிவில் சுந்தர பாண்டியர் அளித்த செல்வத்துடன் அவர்கள் மதுரையை விட்டுக்கிளம்பினர். அவர் அங்கிருந்து எடுத்துச் சென்றது 96000 மணங்குப் பொன், 612 யானைகள், இருபதாயிரம் குதிரைகள் என்று பார்னி என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார். ஒரு மணங்கு என்பது கிட்டத்தட்ட 11.2 கிலோவுக்குச் சமம், அப்படியானால் அவர் அடித்துச் சென்ற தங்கத்தின் எடையை நீங்களே கணக்கிட்டுட்டுக்கொள்ளுங்கள்.



பராக்கிரம பாண்டியர் கட்டிய மேற்குக்கோபுரம் 

மாலிக்கபூர் கிளம்பியவுடன் வீரபாண்டியர் மறைந்திருந்த இடத்தை விட்டு வெளியே வந்தார். மீண்டும் சகோதரர்களிடையே போர் மூண்டது. இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்ட சேர மன்னர்  ரவிவர்மர் குலசேகரர்  இருவரையும் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றிக்கொண்டார். அதற்குப் பின் பல குழப்பங்கள். ஒரு வழியாக பாண்டியர்களின் தாயாதியான ஜாடவர்மர் பராக்கிரம பாண்டியர் பொயு 1315ல் மதுரை ஆட்சிக்கட்டிலில் ஏறினார். நாட்டின் நிலைமையை ஓரளவு சீர்திருத்தி மதுரை கோவிலில் அடுத்த கட்ட திருப்பணிகளைத் தொடங்கினார். கிழக்கு கோபுரத்திற்கு இணையாக மேற்கு வாயிலில்  ஒரு ஒன்பது நிலைக் கோபுரத்தை எழுப்பினார். ஆனால் அது நிறைவேறுவதற்குள் மீண்டும் டெல்லியிலிருந்து தொல்லைகள். குஸ்ராவ் கான் என்பவர் 1316ல் படையெடுத்து மதுரையைச் சூறையாடினார். குஸ்ராவ் கானின் படைகள் மதுரைக்கு வருவதற்கு முன்பாகவே அதை விட்டு ஓடிவிட்ட பராக்கிரம பாண்டியர், மறைந்திருந்து கானின் மீது கொரில்ல தாக்குதல்களைத் தொடுத்தார். அந்தத் தாக்குதல்களையும் மதுரையில் அப்போது பெய்த தொடர்மழையையும் தாங்க முடியாமல், கிடைத்ததை எடுத்துக்கொண்டு குஸ்ராவ் கான் டெல்லி திரும்பினார். இதற்குள் அவர் விளைவித்த சேதம் கொஞ்சநஞ்சமல்ல. அவர் அந்தப்பக்கம் போனவுடன், பராக்கிரமபாண்டியர் மீண்டும் மதுரையைப் பிடித்துக்கொண்டு கோபுரத் திருப்பணியைத் தொடர்ந்தார். ஆனால் டெல்லி சுல்தான்கள் அவரைச் சும்மாவிடவில்லை.


                                                                                                                             அடுத்து


உசாத்துணைகள்
1. Madurai through the ages - Devakunjari
2. South India and her Muhammadan Invaders - S Krishnaswamy Iyangar






3 comments:

  1. இந்தப் பதிவில் சொல்லப்படும் வரிசைக் கணக்குகள் எளிமையாகப் புரிகின்றன.

    இந்தக் குஸ்ராவ் கான் என்பவன் யார்? முகலாய அரசனா? சிற்றரரசனா? இல்லை ஏதேனும் பகுதியை நிர்வகித்த நவாப்பா?

    ReplyDelete
  2. இந்த எளிய வரிசைக் கணக்குகளுக்கு நாம் இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அமீர் குஸ்ரூ, பார்னி, வாஸ்ஸாப் ஆகியோருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். நாட்கணக்கில் நடந்தவற்றைக் குறித்து வைத்திருக்கிறார்கள் அவர்கள் :)

    குஸ்ராவ் கான், அலாவுதீன் கில்ஜியின் மகனான முபாரக் ஷாவிடம் அடிமையாக வந்து சேர்ந்து பின் தளபதிகளில் ஒருவராக உயர்த்தப்பட்டவன். அவரின் தென்னிந்தியப் படையெடுப்புகளுக்குத் தலைமை வகித்தவன். மதுரையிலிருந்து திரும்பிய பிறகு தன் அரசரான முபாரக் ஷாவைக் கொலை செய்து ஆட்சியையும் சில காலம் கைப்பற்றிக்கொண்டான். பின்னால் தீபல்பூரின் ஆளுநரால் கொலை செய்யப்பட்டு மாண்டான்.

    ReplyDelete