Monday 18 April 2016

சித்திரைத் திருவிழா - 9

தாம் செய்த வலுவான தேர்களை இழுக்க போதுமான ஆட்கள் கிடைக்கவில்லையே என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கும் திருமலை நாயக்கரை அப்படியே விட்டுவிட்டு, மதுரைக்கு வட கிழக்கில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் அழகர் மலைக்குச் செல்வோம்.

திருமாலிருஞ்சோலை, அழகர்மலை என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த வைணவத்தலம் புராதனமான வரலாற்றை உடையது. இந்தக் கோவிலில் உறையும் சுந்தரராஜப் பெருமாள் ஆழ்வார்களால்  மங்களாசாசனம் செய்யப்பட்டவர். 'சுந்தரத் தோளுடையான்' என்று ஆண்டாள் இவரை அழைக்கிறார். பரிபாடலில் இந்தத் தலத்தைப் பற்றிய குறிப்புகள் உண்டு. சிலப்பதிகாரத்தில் காடு காண் காதையில் மதுரைக்குச் செல்லும் மூன்று வழிகளில் ஒன்றாக திருமால் குன்ற வழியை மாங்காட்டு மறையவன் உரைக்கின்றான். அங்கேயுள்ள சிலம்பாற்றைப் பற்றியும் கூறுகின்றான்.

இப்படிப் பல சிறப்புகள் கொண்ட அழகர் கோவில், சிறு தெய்வம், பெரும் தெய்வம் என்று சிலர் இப்போது அடிக்கும் ஜல்லிக்கு எல்லாம் அப்பாற்பட்டது. இந்த ஊரைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கெல்லாம் அழகர்தான் குல தெய்வம். அவர்களால் கள்ளழகர் என்று அன்போடு அழைப்படுபவர் இவர். அதே சமயம், கிராம தேவதையாகக் கருதப்படும் கருப்பண்ணசாமிக்குத் தான் இந்தக் கோவிலில் முதற்பூசை.  பதினெட்டாம்படிக் கருப்பண்ணசாமியாக இங்கு அருள்பாலிக்கும் அவருக்கு முறையான பூஜைகள் செய்த பிறகே அழகர் வெளியே கிளம்புவார். இக்கோவிலின் இன்னொரு சிறப்பு, உற்சவ மூர்த்தியான சுந்தர ராஜப் பெருமாள், அபரஞ்சி என்னும் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னால் செய்யப்பட்டவர். இப்போது நாம் சுத்தத் தங்கம் என்று சொல்லும் பொன் பத்தரை மாற்று, அதாவது பத்து பங்கு தங்கத்திற்கு அரைப்பங்கு செம்பு சேர்த்துச் செய்யப்பட்டது. அப்படியானால் அபரஞ்சிப் பொன் எவ்வளவு தூய்மையான தங்கம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.




ஒன்பதாம் திருநாளில் திக்விஜயம் புறப்படும் மீனாட்சியம்மையும் அவருடன் போர்புரியத் தயாராகும் சொக்கநாதரும்

இந்த அழகர் கோவிலைப் பற்றிச் சொல்லப்படும் புராணக் கதை ஒன்று உண்டு. இங்கேயுள்ள சிலம்பாற்றில் சுதபஸ் என்னும் முனிவர் நீராடிக் கொண்டிருந்தபோது அங்கே வந்த துர்வாசரைக் கவனியாது இருந்துவிட்டதால் அவரைத் தவளையாகுமாறு துர்வாசர் சபித்துவிட்டார். அவர் சாப விமோசனம் வேண்டவே, வைகையாற்றில் தவம் செய்யுமாறும் அங்கே அழகர் பெருமான் வந்து சாப விமோசனம் அளிப்பார் என்றும் கூறிச்சென்றார். அதன்படியே வைகையாற்றில் தவம் செய்துகொண்டிருந்த முனிவருக்கு அழகர் காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சித்திரை மாதமும் சித்ரா பௌர்ணமி அன்று வைகையாற்றின் கரையில், மதுரைக்கு வடமேற்கில், சமயநல்லூருக்கும் சோழவந்தானுக்கும் இடையில் உள்ள,  தேனூர் என்ற ஊரில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதற்காக மலையிலிருந்து அழகர் புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் வரை வருவார். அச்சமயம் அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து பெரும் திரளான மக்கள் அழகரைச் சந்திக்கப் புறப்பட்டு வருவார்கள். கள்ளர் வேடமணிந்து அழகரை வழிபடுவார்கள்.

இந்த மக்கள் கூட்டத்தை மதுரைத் தேர்த்திருவிழாவுக்காக பயன்படுத்திக்கொள்ள மாஸ்டர் பிளான்  ஒன்றைத் தீட்டினார் திருமலை நாயக்கர்.
                                                                                                                                            அது ......



படங்கள் நன்றி - ஸ்டாலின் ஃபோட்டோகிராஃபி

உசாத்துணைகள்
1.  History of Nayaks of Madura - R Sathyanatha Aiyar
2.   Madurai through the ages - Devakunjari

No comments:

Post a Comment