Tuesday 12 April 2016

சித்திரைத் திருவிழா - 3

சோழர்களின் சிற்றரசர்களாக இருக்க வேண்டிய நிலையிலும் கோவிலுக்கு செய்ய வேண்டிய திருப்பணிகளை பாண்டியர்கள் நிறுத்தவில்லை. கோவிலின் முன்மண்டபங்களையும், உள் பிரகாரங்களிலும் தெய்வங்களின் சன்னதிகளின் மேலும் 'காடக கோபுரம்' போன்ற சிறு கோபுரங்களையும் பாண்டிய மன்னர்கள்  கட்டினர். கோவிலின் நிர்வாகத்தையும் செம்மைப்படுத்தினர். ஏழு ஸ்தானீகர்கள் கோவில் நிர்வாக அதிகாரிகளாகச் செயல்பட்டனர். அவர்கள் 'மகர முத்திரை' ,'மகரக் கொடி', 'பொன் எழுத்தாணி', வ்ருஷப முத்திரை',  'நாக முத்திரை' ஆகிய இலச்சினைகளைப் பயன்படுத்தியதாக 'மதுரை ஸ்தானீகர் வரலாறு' என்ற நூல் கூறுகிறது.  கோவிலைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்ட குறிப்பேடாக 'ஶ்ரீதளம்' என்ற நூல் உருவாகப்பட்டது. இறைவனுக்கு இசைந்த தமிழ்பாமாலைகளான தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, திருவிசைப்பா ஆகியவைகளை இசைக்க இரு ஓதுவார்கள் நியமிக்கப்பட்டனர்.
பொயு 1190 வாக்கில் அரியணை ஏறிய முதலாம் ஜடாவர்மன் குலசேகர பாண்டியர்  இத் திருப்பணிகளை மேலும் செம்மைப்படுத்த எண்ணி, ஆடி வீதியைச் சுற்றி ஒரு மதிலும், சொக்கநாதர் சன்னதிக்கு நேர் எதிரில், கிழக்கு வாசலில், ஒரு பெரும் கோபுரம் ஒன்றையும் உருவாக்கத்திட்டமிட்டார். இதற்கான வேலைகளும் துவக்கப்பட்டன. ஆனால், இங்கு அரசியல் குறுக்கிட்டது. என்ன காரணத்தாலோ அதுவரை சோழ நாட்டிற்கு செலுத்தி வந்த கப்பத்தை, செலுத்த முடியாது என்று பாண்டியர் மறுத்துவிட்டார். அப்போது சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்த மூன்றாம் குலோத்துங்க சோழர் இதைக் கேட்டு வெகுண்டெழுந்து மதுரையின் மீது பெரும்படையுடன் வந்து போர் தொடுத்தார். மட்டியூர், கழிக்கோட்டை (இன்றைய சிவகங்கை மாவட்டங்களில் இந்த ஊர்கள் உள்ளன) ஆகிய இடங்களில் நடந்த போர்களில் பாண்டியப் படை பெரும்தோல்வி கண்டது. குலசேகர பாண்டியரும் அவரது தம்பி சுந்தர பாண்டியரும் மதுரையை விட்டு ஓடிவிட்டனர். மதுரைக்குள் வெற்றி வீரனாக நுழைந்த குலோத்துங்கர் அரண்மனையின் பல கட்டடங்களை அழித்து பாண்டியர்களின் அபிஷேக மண்டபத்தை தீக்கிரையாக்கினார். சோழ பாண்டியன் என்ற பெயரில் விஜயாபிஷேகமும், வீராபிஷேகமும் செய்து கொண்டு, நாட்டிற்குத் திரும்பினார். பிற்பாடு, பாண்டிய நாடு குலசேகரருக்கு மீண்டும் அளிக்கப்பட்டது, சிற்றரசராகத் தொடரவேண்டும் என்ற எச்சரிக்கையுடன். கிழக்குக் கோபுரம் கட்டும் பணி இந்தக் காரணங்களால் நின்று போய் விட்டது.


குலசேகரருக்கு பின் வந்த அவர் தம்பி முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், (1216), தன் அண்ணன் அடைந்த தோல்விக்கு பழிக்குப் பழி வாங்கத் திட்டமிட்டு, பெரிய படை ஒன்றைத் திரட்டி சோழ நாட்டின் மேல் போர் தொடுத்தார். சோழப் படைகளை பல இடங்களில் தோற்கடித்து சோழ நாட்டில் பேரழிவை ஏற்படுத்தி மதுரை மீண்டார். அங்கிருந்து கொண்டு வந்த செல்வங்களை வைத்து கோவில் திருப்பணி மீண்டும் துவக்கப்பட்டது. ஒன்பது நிலைக் கோபுரமாக கிழக்குக் கோபுரம் எழுந்தது. இன்றும் இந்தக் கோபுரம் அவர் பெயரால் சுந்தரபாண்டியன் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கோபுரத் திருப்பணி அவர் காலத்திலும் முற்றுப் பெறவில்லை. மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பிறகு, இரண்டாம் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் மற்றும் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆகிய அரசர்கள் மதுரையை ஆண்டனர். அதற்குப் பின் 1251ல் அரியணை ஏறிய ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சியில் பாண்டியப் பேரரசு பெரும் வளர்ச்சியை அடைந்தது.

மேற்கே சேரநாடு, கிழக்கே சோழநாடு, தெற்கே இலங்கை ஆகிய இடங்களில் படையெடுத்துச் சென்று அந்த நாடுகளையெல்லாம் பாண்டியர்களின் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தார் சுந்தர பாண்டியர், வடக்கே படையெடுத்துச் சென்று ஹொய்சாளர்களையும், காஞ்சிபுரத்தை ஆண்டு தெலுங்குச் சோழ அரசர்களையும் வென்று, ஆந்திர மாநிலத்தின் காகதீய கணபதியையும் அவர் மகள் ருத்ரமாதேவியையும் (இவர் சரித்திரம்தான் அனுஷ்கா நடித்துப் படமாக வெளிவந்தது) போரில் தோல்வியுறச்செய்தார் அவர். இப்படி சகல திசைகளிலும் வெற்றிமேல் வெற்றியைக் குவித்ததால், 'எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்', சமஸ்த ஜகதாதார ஸோமகுலதிலக', 'எல்லாம் தலையானான்', 'கோதண்ட ராமன்' என்ற விருதுப் பெயர்களைச் சூட்டிக்கொண்டார்.இப்போர் வெற்றிகளினால் கிடைத்த பெருஞ்செல்வத்தை கோவில் திருப்பணிகளுக்குச் செலவிட்டார் சுந்தரபாண்டியர். தில்லைச் சிதம்பர விமானத்திற்கும், திருவரங்கத்தின் கோபுரத்திற்கும் பொன் வேய்ந்தார். தன் முன்னோர்கள் எழுப்பிய மதுரைக் கிழக்குக் கோபுரத் திருப்பணியையும் நிறைவு செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். அவருக்கு அடுத்து வந்த முதலாம் மாறவர்மர் குலசேகர பாண்டியரும் பாண்டிய அரசை வெற்றிப்பாதையில் செலுத்தவே, மதுரையும், மீனாட்சி அம்மன் கோவிலும் இக்காலகட்டத்தில் செல்வத்தில் கொழித்து,  மகோன்னதமான நிலையை அடைந்தது.

ஆனால் காலம் எப்போதும் எதையும் ஒரே நிலையில் இருக்க விடுவதில்லை அல்லவா, அதுதான் இங்கும் நடந்தது. அது ...

                                                                                                                                             அடுத்து

படங்கள் : நன்றி  ஸ்டாலின் போட்டோகிராபி

உசாத்துணைகள்
1. தமிழகக் கோபுரக்கலை மரபு - முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்
2. Madurai Through Ages - Devakunjari
3. பிற்கால சோழர் சரித்திரம்  - சதாசிவப் பண்டாரத்தார் 
No comments:

Post a Comment