Skip to main content

சித்திரைத் திருவிழா - 6

மதுரை  சுல்தான்கள் வரிசையை துக்ளக்கின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆசன் கான் துவக்கி வைத்தான் என்று பார்த்தோம். இதைக் கேள்விப்பட்ட முகமது பின் துக்ளக் அவனைக் கொல்ல ஒரு படையை அனுப்பி வைத்தான். ஆனால், அந்தப் படைவீரர்களுக்கு லஞ்சம் கொடுத்துத் தன் பக்கம் திருப்பிக்கொண்டான் ஆசன்கான். இதைக் கேள்விப்பட்டு கடும்கோபம் அடைந்த துக்ளக் ஆசன்கானின் மகனை சித்ரவதை செய்து, இரு துண்டுகளாக வெட்டிக் கொலை செய்தான். துக்ளக்கின் அவையில் இருந்தவரும் அக்காலத்திய பயணக்குறிப்புகளை எழுதியவருமான இபின் பதூதா, ஆசன் கானின் மகளை மணம் புரிந்திருந்தார். மைத்துனனுக்கு நேர்ந்த கதி தமக்கும் நேரலாம் என்று அஞ்சி அவர் நாட்டை விட்டுக்கிளம்பினார்.  ஆனால் இலங்கைக்கு அருகில், அவர் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கிக்கொண்டது. தப்பிப் பிழைத்த அவர் மதுரை வந்து சேர்ந்தார். மதுரையில் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அங்கு ஆசன் கானின் இன்னொரு மகளைத் திருமணம் செய்த கியாசுதீன் கான் ஆட்சி செய்துகொண்டிருந்தார் (1340). தன் 'சகலையை' மரியாதையுடன் வரவேற்று சில காலம் அங்கேயே தங்கச்செய்தார் கியாசுதீன். அங்கு, தாம் பார்த்தவைகளைக் குறிப்புகளாக எழுதிவைத்திருக்கிறார் பதூதா.

அந்தக் குறிப்புகளில் ஒன்று, இந்த நிகழ்ச்சியை விவரிக்கிறது. ஒருநாள் கியாசுதீனும் பதூதாவும் காட்டில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு ஒரு கோவிலில் வழிபாடு நடந்துகொண்டிருந்தது. அங்கு வழிபாடு செய்துகொண்டிருந்தவர்களை அருகில் அழைத்த  கியாசுதீன், அவர்களை இரவு முழுவதும் கூடாரமொன்றில் அடைத்து வைத்தான். மறுநாள் காலையில், அவர்களில் ஆண்களை கூராகச் சீவப்பட்ட குச்சிகளில் கழுவேற்றியதாகவும், பெண்களையும் குழந்தைகளையும் கழுத்தை வெட்டிக் கொலை செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார் பதூதா. "ஒருநாள் நானும் காஜியும் சுல்தானுடன் உணவருந்திக்கொண்டிருந்தோம், அப்போது ஒரு தம்பதியும் அவர்களது ஏழுவயது மகனும் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் தலையை வெட்டி விடுமாறு சுல்தான் உத்தரவிட்டான். நான் தலையைத் திருப்பிக்கொண்டேன், மீண்டும் அங்கு பார்த்தபோது அவர்களின் தலை அவர்கள் உடலில் இல்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார் பதூதா. அதேபோல் இன்னொரு நிகழ்ச்சியும் பதூதாவின் குறிப்புகளில் இடம்பெற்றிருக்கிறது.   ஹொய்சாள அரசரான வீர வல்லாளர் (மாலிக்கபூருக்கு வழிகாட்டி வந்தவர்) கியாசுதீன் மீது போர்தொடுத்தார். கண்ணனூர் கொப்பம் (சமயபுரம்) என்ற இடத்தில் நடந்த போரில் முதலில் வல்லாளர் வெற்றி அடைந்தாலும், மின்னல்வேகத்தாக்குதல் ஒன்றை நடத்திய கியாசுதீன் ஹொய்சாளப்படைகளைத் தோற்கடித்தான். வல்லாளரைச் சிறைப்பிடித்து, அவர் தோலை உரித்து வைக்கோலை அடைத்து மதுரை கோட்டைவாயிலில் தொங்கவிட்டான் கியாசுதீன். இப்படி பல கொடுமைகள் நடந்ததாலோ என்னவோ, மதுரையில் பிளேக் நோய் பரவியது. மதுரை மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்தனர். கியாசுதீனும் அவன் குடும்பமும் இந்த நோய்க்குப் பலியானார்கள். அவரை அடுத்து நசிரூத்தீன் ஷா பதவியேற்றார்.  இப்படியாக மொத்தம் ஏழு சுல்தான்கள் மதுரையை ஆண்டனர்.

இது ஒருபுறம் இருக்க, துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசு ஒன்று உருவாகியிருந்தது. ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்கள் குரு வித்யாரண்யரின் வழிகாட்டுதலில் இந்த அரசை ஏற்படுத்தியிருந்தனர். சிறிது சிறிதாக தென்னிந்தியாவின் பல பகுதிகளை தங்கள் அரசின் கீழ் கொண்டுவந்தனர் அவர்கள்.  புக்கரின் மகனான கம்பண்ணர் 1364ம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தின்மேல்  படையெடுத்து, அந்த நகரைக் கைப்பற்றி அங்கேயே தங்கியிருந்தார். அவரோடு அவர் மனைவியான கங்காதேவியும் வந்திருந்தார். கம்பண்ணரின் திக்விஜயத்தில் நடந்த நிகழ்ச்சிகளை 'மதுரா விஜயம்' என்ற பெயரில் ஒரு அழகான காவியமாக பின்னால் எழுதினார் கங்காதேவி. காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த கம்பண்ணரை சந்திக்க வந்தார் ஒரு பெண். தமிழகத்தின் இருண்ட நிலையைப் பற்றிக்கூறிய அவர், திருவரங்கமும், சிதம்பரமும், மதுரையும் அடைந்த அழிவுகளை எடுத்துரைத்தார். அங்குள்ள கோவில்களில் பூஜைகள் நின்றுபோய்விட்டதையும், பல கோவில்கள் மண்ணடித்துப் போனதையும் சொல்லிய அவர், பாண்டியர்களுக்கு இந்திரன் அளித்த வாளை எடுத்து கம்பண்ணரிடம் கொடுத்தார். தாம் மீனாட்சி தேவியே என்றும், மதுரையை இந்த வாளின் துணைகொண்டு மீட்குமாறும் சொல்லி மறைந்தார் என்று மதுராவிஜயம் கூறுகிறது.திருவிழாவின் ஆறாம் திருநாள் - விடை வாகனத்தில் அம்மையும் அப்பனும் 

தமது படைகளைத் திரட்டிக்கொண்டு 1378ம் ஆண்டு மதுரை நோக்கி வந்தார் குமார கம்பண்ணர். மதுரையை அப்போது சிக்கந்தர்கான் என்ற சுல்தான் ஆண்டுகொண்டிருந்தார். அவரது படைகள் கம்பண்ணரிடம் தோற்றோடின. மதுரையை விட்டுத் தப்பித்த சுல்தான், திருப்பரங்குன்றம் மலைமேலேறி பதுங்கிக்கொண்டான். கம்பண்ணரின் படைகள் திருப்பரங்குன்றம் மலையைச் சூழ்ந்து முற்றுகையிட்டன. சுல்தானின் படைபலம் சொற்பமே என்று உணர்ந்த கம்பண்ணர், அவரை தன்னுடன் 'ஒண்டிக்கு ஒண்டி' வருமாறு அழைத்தார். இருவருக்கும் இடையே திருப்பரங்குன்றம் மலைமீது துவந்த யுத்தம் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்று, சிக்கந்தரைக் கொன்றார் கம்பண்ணர். அவருக்கு அந்த மலைமேல் ஒரு சமாதியும் எழுப்பச்செய்தார்.

பின் படைகளை அழைத்துக்கொண்டு வெற்றி வீரராக மதுரை திரும்பி, மீனாட்சி அம்மையின் கோவிலை அடைந்தார், இடிபாடுகளை அகற்றி,  மண்ணை நீக்கி, கருவரையின் முன் வைக்கப்பட்ட, சுல்தான்களின் படைகளால் சேதம் செய்யப்பட்ட லிங்கத்தை எடுத்து வைத்துவிட்டு, கருவரையின் மூடப்பட்ட சுவரை இடித்து உள்ளே நுழைந்தார். அங்கு சொக்கநாதரின் மேல் சார்த்தப்பட்ட மாலை வாடாமல், கருவறையை மூடிய போது ஏற்றப்பட்ட தீபம் அணையாமல் அவருக்கு தரிசனம் கிடைத்தது. அதன்பின், கம்பண்ண உடையார் மதுரையில் தங்கி நகரையும் கோவிலையும் சீர்ப்படுத்த முனைந்தார்.

சுல்தான்களால்  சேதப்பட்ட லிங்கம், இன்று சுவாமி சன்னதியின் இடப்புறத்தில், எல்லாம் வல்ல சித்தர் சன்னதிக்கு அருகில் உள்ளது.

                                                                                                  அடுத்து என்ன நடந்தது ?படங்கள் நன்றி - ஸ்டாலின் ஃபோட்டோகிராஃபி

உசாத்துணைகள்
1. The India they saw - Meenakshi Jain
2. A History of South India - K A  Neelankanta Sastri 
3. South India and her Muhammadan Invaders - S Krishnaswamy Iyangar


Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

சரஸ்வதி துதி - பாரதியார்

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள், வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள், உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின் றொளிர்வாள், கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள்  1 மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள், மக்கள் பேசும் மழழையில் உள்ளாள், கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவுச் சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலடை யுற்றாள் இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்  2 வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள், வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லா வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர் மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம் தரணி மீதறி வாகிய தெய்வம்.   3 தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம், உய்வ மென்ற கருத்திடை யோர்கள் உயிரி னுக்குயி ராகிய தெய்வம், செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம், கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம், கவிஞர் தெய்வம்