Saturday 16 April 2016

சித்திரைத் திருவிழா - 7

கம்பண்ணர் மதுரையை சுல்தான்களிடமிருந்து மீட்டதும், சீர்கெட்டுப் போயிருந்த நிர்வாகத்தை செம்மைப் படுத்த முயன்றார். மதுரை முறைப்படி விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக ஆக்கப்பட்டது. பாழடைந்து கிடந்த மீனாட்சி அம்மன் கோவிலும் சீரமைக்கப்பட்டது. கம்பண்ணர் ஆட்சி அமைத்ததைக் கேட்ட ஸ்தானீகர்களும் நாடு திரும்பினர். கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் துவக்கப்பட்டன.

கம்பண்ணருக்குப் பிறகு விஜயநகரத்தின் பிரதிநிதியாக இரண்டாம் ஹரிஹரரின் மகன் பொறுப்பேற்றார். அதன்பின் 'உடையார்கள்' என்று அழைக்கப்பட்ட விஜயநகரின் பிரதிநிதிகள் மதுரையை ஆண்டனர். பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் விஜயநகரத்தில் ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாக அந்த அரசின் பிடி தளர்ந்தது. சங்கம வம்சத்தை அடுத்து சாளுவ வம்சமும் அதன்பின் துளு வம்சமும் விஜயநகரத்தை ஆண்டன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மதுரையை வாணாதிராயர்கள் பிடித்துக்கொண்டனர். அதன் பின் மதுரையின் ஆட்சியுரிமையில் பெருங்குழப்பம் நிலவியது. ஆளுக்காள் உரிமை கோரி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனர்.



ஏழாம் திருநாளில்  -   நந்திகேஸ்வர வாகனத்தில் சுவாமியும் யாளி வாகனத்தில் அம்மனும் 

இதற்கிடையில் விஜயநகரத்தின் அரசராக கிருஷ்ணதேவராயர் 1509ம் ஆண்டு பொறுப்பேற்றார். பாமினி சுல்தான்களையும் தம்மை எதிர்த்த மற்ற சிற்றரசர்களையும் வென்று வலிமையான அரசு ஒன்றை உருவாக்கினார். மதுரையின் பிரதிநிதியாக பலம் வாய்ந்த தளபதியான நாகம நாயக்கரை அனுப்பினார். இது கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்காலத்தில் எந்த ஆண்டு நடந்தது என்று சரிவரத் தெரியவில்லை. ஆனால் மதுரைக்கு வந்த நாகம நாயக்கர் விஜயநகரப் பேரரசை எதிர்த்துப் புரட்சி செய்தார். இதனால் வெகுண்ட கிருஷ்ணதேவராயர் அவரை பணியவைக்க நாகம நாயக்கரின் மகனான விஸ்வநாத நாயக்கரை அனுப்பினார். தந்தை என்றும் பாராமல், நாகம நாயக்கரைத் தோற்கடித்த விஸ்வநாதர், அவரைச் சிறைப்பிடித்து கிருஷ்ணதேவராயரிடம் கொண்டு சென்றார். விஸ்வநாத நாயக்கரின் கடமை உணர்ச்சியைப் பாராட்டி அவரையே மதுரையின் பிரதிநிதியாக நியமித்தார். தனது நண்பரும் தளவாயுமான அரியநாத முதலியருடனும் பிரதானியான கேசவப்பருடனும் மதுரை பயணமானர் விஸ்வநாத நாயக்கர். அவருடன் நாகம நாயக்கர் அவருக்காக சேர்த்து வைத்திருந்த பெரும் செல்வத்தையும் எடுத்துச் சென்றார்.

பொயு 1530ல் மதுரையின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார் விஸ்வநாத நாயக்கர். அவருடன் மதுரை நாயக்கர் வம்சம் துவங்கியது. தென் தமிழகத்தின் நிர்வாகத்தை சீர்திருத்தியதில் அவரது தளவாயான அரியநாதரின் பங்கு அளப்பரியது. பாளையக்காரர் முறையை அவர்தான் கொண்டுவந்தார். அதைத் தவிர மதுரைக் கோவிலையும் புனரமைத்தார். மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவை திரும்பக்கட்டப்பட்டன. புதிதாக ஆயிரங்கால் மண்டபத்தையும் அரியநாதர் கட்டினார். கோவில் நிர்வாகம், பூஜைகள், திருவிழாக்கள் ஆகியவை புனரமைக்கப்பட்டன. இந்தப் புனரமைப்புப் பணிகளுக்கெல்லாம், விஸ்வநாத நாயக்கர் தம் சொந்தப் பணத்தையே செலவழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குனி உத்திர நாளில் மீனாக்ஷியம்மன் திருமணம் நடைபெற்றது என்று முன்னரே பார்த்தோம். அதற்கு முந்தைய நாள் மீனாட்சியம்மையின் திக்விஜயமும், அதற்கு முன் பட்டாபிஷேகமும் விமரிசையாக நடைபெற்றுவந்தன (இன்று அந்த பட்டாபிஷேக வைபவம் நடக்கிறது) . கம்பண்ணர் மீனாக்ஷியின் வாளைப் பெற்று மதுரை ஆட்சியுரிமையை அடைந்ததைக் குறிக்கும் விதமாக, பட்டாபிஷேகத்திருநாள் அன்று, மீனாக்ஷியம்மனின் கையிலிருந்து செங்கோலை நாயக்க மன்னர் பெற்றுக்கொண்டு அம்மையின் பிரதிநிதியாக ஆட்சி செய்யும் வைபவம் ஏற்படுத்தப்பட்டது.



தளவாய் அரியநாதரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் 

விஸ்வநாத நாயக்கருக்குப் பின் ஐந்து நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டனர். ஐந்தவதாக ஆட்சி செய்த முத்து வீரப்ப நாயக்கர், தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார். தஞ்சாவூர் நாயக்கர்களின் தொல்லைகளைச் சமாளிக்கவும், வடக்கே இருந்து வரக்கூடிய படையெடுப்புகளின் அபாயத்தைத் தவிர்க்கவுமே அவர் இந்த ஏற்பாட்டைச் செய்ததாகக் கூறப்படுகிறது.அதன்பின் நாயக்கர் ஆட்சி திருச்சியிலிருந்து தொடர்ந்தது.

                                                                                                                  அடுத்து



படங்கள் நன்றி - ஸ்டாலின் ஃபோட்டோகிராஃபி

உசாத்துணைகள்
1.  History of Nayaks of Madura - R Sathyanatha Aiyar 
2. A History of South India - K A  Neelankanta Sastri 



No comments:

Post a Comment